Tuesday, March 14, 2006

பூங்கா விளையாட்டு அரங்கம்-1

உலக சாதனை
ரிக்கி பாண்டிங் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி, தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான 5 ஒரு நாள் போட்டி கொண்ட தொடரின் முதல் இரண்டு ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணியும், 3-வது மற்றும் 4-வது ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றிபெற்றதை தொடர்ந்து 2-2 என்ற கணக்கில் தொடர் சமன்நிலையில் இருந்தது.

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களின் முடிவில் உலகச் சாம்பியனான ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 434 ரன் குவித்து உலக சாதனை படைத்தது. இதன் மூலம் உலக சாதனை படைத்தது மட்டுமல்லாமல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் 400 ரன்னை தொட்ட முதல் அணி என்ற பெருமையையும் அது பெற்றது. இதற்கு முன்பு 1995-96-ம் ஆண்டு கண்டியில் (இலங்கை) நடந்த ஆட்டத்தில் இலங்கை அணி, கென்யாவுக்கு எதிராக 5 விக்கெட் இழப்புக்கு 398 ரன் எடுத்து இருந்ததே இதுவரை உலக சாதனையாக இருந்தது. அதை 434 ரன் எடுத்த ஆஸ்திரேலிய அணி முறியடித்தது.

பின்னர் 435 ரன் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்குடன் தென் ஆப்பிரிக்க அணி பேட்டிங் செய்தது.தொடக்க வீரர்களில் ஒருவரான டிப்பென்னர் ஒரு ரன்னில் அவுட் ஆனார். இதனால் 2-வது விக்கெட்டுக்கு சுமித்துடன், கிப்ஸ் இணைந்தார். இந்த ஜோடி ஆஸ்திரேலிய பந்துவீச்சை உண்டு இல்லை என்று பண்ணிவிட்டது. எந்த திசையில் பந்தை வீசினாலும் அதை பவுண்டரிக்கும், சிக்சருக்கும் விளாசி ரன் சேர்த்தது இந்த ஜோடி. நீங்கள் தான் அடிப்பீர்களா நாங்களும் அடிக்கிறோம் பாருங்கள் என்பதுபோல் இருந்தது தென் ஆப்பிரிக்க வீரர்களின் ஆட்டம்.


கடைசி வரை விறுவிறுப்புக்கும், பரபரப்புக்கும் பஞ்சம் இல்லாமல் நடந்த இந்த ஆட்டத்தில் ஆஸ்திரேலிய அணியை தென் ஆப்பிரிக்கா வீழ்த்தியது. தென் ஆப்பிரிக்கா 49.5 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 438 ரன் எடுத்து ஒரு விக்கெட் வித்தியாசத்தில் உலக சாதனை வெற்றியை பெற்றது. பவுச்சர் 50 ரன்னுடன் இறுதி வரை அவுட் ஆகாமல் களத்தில் நின்றார். ஆஸ்திரேலியாவின் உலக சாதனையை (434 ரன்) ஒரே நாளில் தூள் தூளாக்கியது தென் ஆப்பிரிக்கா. இந்த வெற்றியின் மூலம் 3-2 என்ற கணக்கில் தொடரையும் அந்த அணி கைப்பற்றியது.

புதிய உலக சாதனை படைத்து விட்டோம் என்ற ஆஸ்ரேலியாவின் கனவு நான்கே மணிநேரத்தில் முடிவடைந்தது. பாவம் ஆஸ்ரேலியர்கள் பவுலிங் போட்டு போட்டு களைத்தது மட்டுமல்லாமல் வெற்றி கோப்பையையும் தவறவிட்டனர்…..


மீண்டும் இது போன்ற போட்டியைக்காண எத்தனை ஆண்டுகள் தவம் செய்ய வேண்டுமோ?

இதற்கிடையே நம்மவர்கள் இங்கிலாந்தை வீழ்த்தி 1-0 என்ற கணக்கில் டெஸ்ட் போட்டியில் முன்னிலை பெற்றனர்.

0 Comments:

Post a Comment

<< Home